அநேகமாக நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே கூட்டணியில் இருந்தால் ஆச்சரியப்பட வேண்டாம்.(அவர்கள் எப்போதுமே மக்கள் விரோதக் கூட்டணியில்தான் இருந்து வருகிறார்கள் என்பது இன்னொரு விஷயம்.)
ராஜபக்ஷேவுடன் சேர்ந்துகொண்டு ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தின் வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்தே தீருவோம் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், அந்தக் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் தி.மு.க கூட்டணியில் இருக்கிறார்.
ஒருத்தரையருத்தர் ஒழித்துக் கட்ட விரும்பும் இரு கட்சிகள் ஒரே கூட்டணியில் இருந்துகொண்டு வாக்காளர்களிடம் கூட்டாக பிச்சைப் பாத்திரம் ஏந்தி வரும் நிகழ்ச்சி இந்திய வரலாற்றிலேயே இப்போதுதான் முதல்முறை நடக்கிறது. பகையாளியை உறவாடிக் கெடுக்கும் உத்தியோ என்னவோ...
கேட்டால் காங்கிரசுக்கு தி.முகவுடன்தான் கூட்டு; வி.சியுடன் இல்லை என்பார்கள். வி.சிக்கு தி.மு.கவுடன்தான் கூட்டு; காங்கிரசுடன் இல்லை என்பார்கள்.
இதே லாஜிக்படி வி.சி.யுடனும் காங்கிரசுடனும் பா.ம.க கூட்டு வைத்துக் கொள்ளலாம். ஆனால் தனக்கு தி.மு.கவுடன் கூட்டு இல்லை என்று சொல்லலாம். பா.மா.கவுடன், வைகோவும் இடதுசாரிகளும் கூட்டு வைத்துக் கொள்ளலாம். ஆனால் தங்களுக்கு காங்கிரசுடன் உறவு இல்லை என்று சொல்லலாம். காங்கிரசுடன் கூட்டு வைக்கும் பா.ம.கவுடன் ஜெயலலிதா கூட்டு வைக்கலாம். மற்றவர்களுடன் உறவு இல்லை எனலாம்.
பாவம் பி.ஜே.பி. அவர்களும் காங்கிரஸ், இடதுகள் இருக்கும் இதே கூட்டணியில் ஜெயலலிதாவோடு மட்டும் கூட்டு வைத்துக் கொள்ள அனுமதித்துத் தொலைக்கலாம். விஜய்காந்த்தும் சரத் குமாரும் (அரசியலில்) சின்ன வயசுக்காரர்கள். 2011 வரை காத்திருக்கலாம். இப்போது காசை வீணாக்க வேண்டாம்.
கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆளுக்கு வெவ்வேறு 20 தொகுதிகளை எடுத்துக் கொண்டு , அந்த 20க்குள், தங்களிடம் சரணாகதி அடைந்திருக்கும் தமிழின, தேசிய, புரட்சி வீரர்களுக்கெல்லாம் ஆளுக்கு ஒன்று இரண்டு கொடுத்துவிட்டால், 40 தொகுதியிலும் போட்டியே இல்லாமல் தேர்தலை நடத்தி முடித்துவிடலாம்.
ஏராளமான பணமாவது மிச்சமாகும்.
அட வெட்கங்கெட்டவர்களே.....
என்ன கூட்டணி அமைக்கிறீர்கள் ? எந்தக் கொள்கையும் இல்லாமல், ஏன் ஒருவரையருவர் எதிர்க்கிறீர்கள் என்று எடுத்துச் சொல்ல ஒரு நியாயமான கொள்கை வேறுபாடும் இல்லாமல், சீட் பிடிப்பதை மட்டுமே லட்சியமாகக் கொண்டு, ஏன் மக்களை இவ்வளவு கேவலமாக ஏமாற்றுகிறீர்கள் ?
இவர்களுடைய ஏமாற்று திட்டங்கள் தேர்தலுக்கு முன்பு மட்டுமல்ல. பின்னரும் தொடர்பவை. எந்த கட்சிக்கு எத்தனை சீட் கடைசியில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தேர்தலுக்குப் பின்னர் இன்னும் புதுப்புது கூட்டணிகளை உருவாக்கப் போகிறார்கள். ஜனநாயகத்தையும் தேசத்தையும் காப்பாற்ற நிலையான ஆட்சி தேவை என்பதால் இப்படி அணி மாற வேண்டியிருக்கிறது என்று அப்போது அதற்கும் ஒரு நியாயம் பேசுவார்கள்.
கொஞ்சமாவது நேர்மை இருந்தால் இந்தக் கட்சிகள் இப்போது செய்ய வேண்டியது என்ன ? ஒவ்வொருவரும் தனித்தனியே போட்டியிடவேண்டும். அவரவருடைய அசலான மக்கள் ஆதரவு, பலம் என்ன என்பதைக் காட்ட முன்வரவேண்டும்.
ஆனால் நிச்சயம் அப்படி இவர்கள் செய்யப் போவதில்லை.
இந்தச் சூழ்நிலையில் மக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் ? இவர்கள் அத்தனை பேரையும் நிராகரிக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.
எப்படி நிராகரிப்பது ? தேர்தலன்று வீட்டிலேயே உடகார்ந்துகொண்டு நிராகரிப்பது தற்கொலைக்கு சமம். வாக்குச் சாவடிக்குப் போய் இவர்கள் அத்தனை பேருக்கும் எதிராக ஓட்டளித்து நம் நிராகரிப்பைப் பதிவு செய்ய வேண்டும்.
நல்லவேளையாக அதற்கு சட்டத்தில் அற்புதமான வழி இருக்கிறது. அதுதான் 49 ஓ !
வாக்குச் சாவடிக்குச் சென்றதும் நம் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு, வாக்குச் சாவடி அதிகாரி, நம்மிடம் ஒரு நோட்டில் கையெழுத்து வாங்குவார். பிறகு அடுத்த அதிகாரி நம் விரலில் மை வைப்பார். மை வைத்த உடன், நாம் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை; 49 ஓ பதிவு செய்ய விரும்புகிறேன் என்று சொல்லவேண்டும். உடனே முதலில் நாம் கையெழுத்திட்ட அதே நோட்டில், அந்தக் கையெழுத்தின் பக்கத்திலேயே 49 ஓ என்று எழுதி இன்னொரு முறை நாம் கையெழுத்திட வேண்டும். இதுதான் 49 ஓவைப் பதிவு செய்யும் முறை.
இதைச் செய்யக் கூடாது என்று நம்மை யாரும் & சாவடி அதிகாரி முதல் கட்சிப் பிரதிநிதிகள் வரை தடுக்க முடியாது. அதற்கு அவர்கள் யாருக்கும் உரிமை இல்லை. தடுத்தால் போலீசை அழைக்கலாம். நரேஷ் குப்தாவுக்கு அங்கிருந்தே ஃபோன் செய்யலாம்.
ஏற்கனவே நரேஷ் குப்தா, தேர்தல் ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பில் 49 ஓ பற்றியும் எடுத்துச் சொல்ல சென்ற தேர்தல் போதே உத்தரவிட்டிருக்கிறார்.அதனால் எந்த தேர்தல் ஊழியரும் இது எனக்குத் தெரியாது என்று சொல்ல முடியாது. தவிர இந்த முறை சமூக ஆர்வலர் அ.கி.வேங்கடசுப்பிரமணியன் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த மனுவின் பேரில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 49 ஓ பிரிவு பற்றிய சுவரொட்டியும் இடம் பெற இருக்கிறது.
தனியே போய் சாவடியில் பகிரங்கமாக 49 ஓ பதிவு செய்ய தயக்கமாக இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் வாக்குச் சாவடியில் 49ஓ பதிவு செய்ய விரும்பும் இதர நண்பர்கள் சேர்ந்து ஒரு இடத்தில் சந்தித்து ஒன்றாகப் போய் வரிசையில் நின்று 49 ஓ பதிவு செய்யுங்கள்.
தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் ஏழு வாரங்கள் இருக்கின்றன. கொள்கையில்லாமல் சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் அமைத்துக் கொன்டு நம்மைத் தொடர்ந்து கொள்ளையடிக்கும் ஒரே நோக்கத்துடன் இயங்கும் அத்தனைக் கட்சிகளையும் நிராகரிக்க
No comments:
Post a Comment